×

அண்ணாமலை எனக்கு அல்வா கொடுத்து விட்டார்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எனக்கு அல்வா கொடுத்து விட்டார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் மாநில பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ” பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அல்வா கொடுத்தார். ராகுல்காந்தி சொல்வது போன்ற அல்வா இல்லை.

அல்வா கிண்டுவது என்பது காங்கிரஸ் காலத்திலும் நடந்தது. அது வழக்கமான நடைமுறை. அதிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. அல்வாவிலும் ராகுல் காந்தி அரசியல் செய்கிறார். அவர்கள் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்றார். பாஜ தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”பட்ஜெட் என்பது பலர் சேர்ந்து உருவாக்குவது. நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் தான் செய்கிறார்.

உருவாக்கவில்லை. அல்வா கிண்டுவதில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என ராகுல் காந்தி அரசியல் செய்துள்ளார். 48 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை மக்கள் தான் உருவாக்கி உள்ளனர். பல அமைச்சகங்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என பல கோரிக்கைகளுக்குப் பின்னர் இறுதி செய்யப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்வது காங்கிரஸ் கட்சி போன்று அல்ல. 4 பேர் உட்கார்ந்து நாட்டை ஆட்சி செய்வதற்கு.

இடஒதுக்கீடு வேண்டாம் என அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஜவஹர்லால் நேரு கடிதம் எழுதினார். மண்டல் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என ராஜிவ்காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மண்டல் கமிஷனுக்குப் பின்னர் தான் பிற்படுத்தப்பட்டோரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வந்தனர். 1990க்கு பின்னர் தான் பிற்படுத்தப்பட்டோரில் ஓ.பி.சி ஐஏஎஸ் அதிகாரிகள் வந்தனர். மத்திய அரசில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயலாளராக 25 ஆண்டுகள் தேவை. இதையெல்லாம் குறித்து ராகுல் காந்தி தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க வேண்டும் என்றால் பெரிய அளவிலான தொகையை செலவு செய்ய வேண்டியது வரும்.

நாட்டை நடத்த தகுதி இல்லாதவர்கள் நாட்டை குறித்து பேசுவதுதான் ராகுல்காந்தி போன்றோர். மண்டல் கமிஷன் குறித்து எதுவுமே தெரியாமல் ராகுல் காந்தி பேசியதற்கு நிர்மலா சீதாராமன் சிரிக்காமல் என்ன செய்வார்?. எதுகுறித்தும் கவலையில்லாமல் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற வகையில் ராகுல்காந்தி பேசுகிறார். தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் கூட வரவில்லையென்றால் அரசியலை விட்டே நான் சென்றுவிடுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

The post அண்ணாமலை எனக்கு அல்வா கொடுத்து விட்டார்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Tamilisai ,Soundararajan ,Chennai ,Tamilisai Soundararajan ,BJP ,president ,Amar Prasad Reddy ,T. Nagar, Chennai ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...