திருமலை: தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை ஆளுங்கட்சி எம்எல்ஏ தூக்கி வீசி உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடந்தன. தேர்தல் வன்முறை தொடர்பாக 10 நாட்களுக்கு பின் ஒரு வீடியோ வெளியாகி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வாக்குப்பதிவின்போது மச்சர்லா தொகுதி எம்எல்ஏவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா, ரெண்டசிந்தலா மண்டலம் பால்வாய்கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் செல்கிறார்.
அப்போது அவர் வாக்குச்சாவடியில் உள்ள ஊழியர்களை மிரட்டுகிறார். பின்னர் திடீரென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைக்கிறார். மேலும் வாக்குச்சாவடி முகவர்களை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரி தாக்குவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள வெப்-கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து 3 தனிப்படை அமைத்து ராமகிருஷ்ணாவை ஆந்திர போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரெட்டி மாவட்டம் இஸ்னாபூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இருந்த ராமகிருஷ்ணாவை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
* 7 ஆண்டு வரை சிறை தண்டனை
மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ வீடியோ வெளியான பிறகு ராமகிருஷ்ணா அவரது ஆதரவாளர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக எம்எல்ஏ ராமகிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
The post ஆந்திராவில் தேர்தலின்போது வன்முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ கைது: 10 நாட்களுக்கு பின் வெளியான வீடியோவால் சிக்கினார் appeared first on Dinakaran.