அனந்தமங்கலம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே அனந்தமங்கலத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீஅரங்கநாயகி உடனுரை அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிரம் வருடம் பழமையான இக்கோயில் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழமையான இக்கோயிலை, புனரமைப்பு பணி செய்து, திருக்குட கும்பாபிஷேகம் செய்ய, தீர்மானிக்கப்பட்டு 10ம் தேதி முதல் புனிதநீர் ஊற்றப்பட்ட கலசங்களுக்கு, லஷ்மி ஹோமம் உள்ளிட்ட மூன்று காலபூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள்ளாக மங்கள வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. மேலும், ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஅம்மச்சார் துர்க்கை அம்மன், அரங்கநாயகி உடனுரை அகத்தீஸ்வரர் கோயில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், அனந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என கோஷம் எழுப்பி, இறைவனை வணங்கிச் சென்றனர். விழாவில், அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post அனந்தமங்கலம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: