அம்பத்தூர் மண்டலத்தில் மக்களை தேடி மேயர் முகாம்: மக்களிடம் இருந்து 474 கோரிக்கை மனுக்களை பெற்று மேயர் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், மக்களை தேடி மேயர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், என அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, முதன்முதலில் மக்களை தேடி மேயர் சிறப்பு முகாம் 3.5.2023 அன்று 5வது மண்டலத்தில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயர் பிரியா நேரடியாக பெற்று, உரிய நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, 31.5.2023 அன்று 6வது மண்டலத்திலும், 5.7.2023 அன்று 13வது மண்டலத்திலும், 10.8.2023 அன்று 1வது மண்டலத்திலும் மக்களை தேடி மேயர் திட்ட முகாம் நடத்தப்பட்டு, அதில் பொதுமக்களிடம் இரு்நது பெறப்பட்ட கோரிக்கைகள் மீது மேயரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர், சுவாதி பேலஸில், மக்களை தேடி மேயர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், மேயர் பிரியா பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து 474 கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளிக்கூடத்தில் கட்டிட வசதி, சமுதாய நலக்கூட மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 474 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியின்போது, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்களையும், அம்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட 12 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்கான பட்டாக்களையும் மேயர் பிரியா வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், கா.கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மண்டலக்குழு தலைவர்கள் பி.கே.மூர்த்தி, கூ.பி.ஜெயின், நிலைக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, மண்டல அலுவலர் விஜூலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்பத்தூர் மண்டலத்தில் மக்களை தேடி மேயர் முகாம்: மக்களிடம் இருந்து 474 கோரிக்கை மனுக்களை பெற்று மேயர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: