அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் மாநிலங்களின் 15% இடங்களை பறிக்காமல் மருத்துவத்தில் 100% இடங்களையும் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை

* சிறப்பு செய்தி
மருத்துவ கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் மாநிலங்களின் 15% இடங்களை பறிக்காமல் 100% இடங்களும் அந்தந்த மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கிய பிறகுதான், அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு கீழ் உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த முடியும்.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மருத்துவ கவுன்சலிங் குழு (எம்.சி.சி.) கடந்த 14ம் தேதி வெளியிட்டது. அதன்படி, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களுக்கு 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி முடிந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு என மொத்தம் 40 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிட்டப்பட்டது. தமிழ்நாட்டில் ஜூலை 25ம் தேதி மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

2023-2024ம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40,200 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3,994 விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு மட்டும் ஓமந்தூரர் மருத்துவ வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். இந்த முறை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி வரும் 25ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

* 15% இட ஒதுக்கீட்டிற்கு எழும் எதிர்ப்புகள்
நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் பலரின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசாங்கம், தற்போது 15% இட ஒதுக்கீட்டின் மூலம் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாணவ-மாணவிகளின் உரிமையையும் பறித்து வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டால் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாணவ-மாணவிகள் தங்களுக்கான இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுகிறது. 15% இட ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களையும் நாங்கள் தான் நிரப்புவோம் என ஒன்றிய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. அப்படி செய்தால் வட மாநில மாணவர்கள் தான் அனைத்து இடங்களையும் பெறுவார்கள் என திடீரென எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ராஜராஜன் கூறுகையில்:- மாநில அரசின் 100% இடங்களும் மாநிலங்களுக்கே வேண்டும் என்பதுதான் அனைத்து மாநில அரசின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள் தற்போது நீட் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றி அடைய தொடங்கி விட்டனர். எனவே தற்போது பாஸ் ஆவது என்பது பெரிய விஷயம் அல்ல. தங்களுக்கான உரிமையை பெறுவது என்பது தான் கடினமாக மாறிவிட்டது. எனவே ஒன்றிய அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, 100% இடங்களையும் மாநில அரசிடமே கொடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை என்றார்.

* எம்.பி.பி.எஸ்- தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 6,326
* பி.டி.எஸ்- தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,768
* 7.5% ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 473
* 7.5% ஒதுக்கீட்டில் பி.டி.எஸ் இடங்கள் 133

* 7.5% ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இடங்கள்
2021-22ம் ஆண்டு 555
2022-23ம் ஆண்டு 584
நடப்பாண்டு 660

The post அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் மாநிலங்களின் 15% இடங்களை பறிக்காமல் மருத்துவத்தில் 100% இடங்களையும் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: