வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் அக். 25ம் தேதி நடக்கிறது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மே மாதம் 29ம் தேதி 2024 ஜனவரி 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27ம் தேதி வெளியிடப்பட உள்ளதால் 18 வயது நிரம்பியவர்கள் அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம். அலுவலகம் செல்வோர் வசதிக்காக சிறப்பு முகாம்கள் நவம்பர் 4 மற்றும் 5ம் தேதியும், நவம்பர் 18ம் தேதி மற்றும் நவம்பர் 19ம் தேதி என நாட்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வருகிற 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுப்படும் உள்ள நிலையில், வருகிற 25ம் தேதி (புதன்) அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்’’ என்றார்.

2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், வருகிற 25ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கள்ள ஓட்டு போடாமல் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அரசியல் கட்சிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

The post வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் அக். 25ம் தேதி நடக்கிறது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: