வான் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய பீரங்கிகள், சக்திவாய்ந்த ரேடாரை அதிகரிக்க திட்டம்: ராணுவம் தகவல்

புதுடெல்லி: தற்போது நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரிலும், இஸ்ரேல்-ஹமாஸ் போரிலும் வான்வழி தாக்குதல் முக்கிய பங்கு வகித்தது. இதில் டிரோன்கள் முக்கிய தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அதே சமயம் உக்ரைன் சக்திவாய்ந்த ரேடார்களை பயன்படுத்தியதன் மூலம் தனது வான் பாதுகாப்பை உறுதி செய்து அழிவுகளை பெருமளவில் தவிர்க்க முடிந்தது. இத்தகைய சமகால போர்களின் அடிப்படையில், இந்தியாவும் தனது வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த தயாராகி இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ விமான பாதுகாப்பு இயக்குநர் ஜெரனல் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா கூறுகையில், ‘‘தற்போது நம்பிடம் எல்70, ஜூ-23எம்எம், தன்குஸ்கா, ஒசா-ஏகே ஏவுகணை அமைப்பு போன்ற பீரங்கி வகைகளும், தரையிலிருந்து வான் இலக்கை தகர்க்கும் ஆயுத அமைப்புகளும் உள்ளன. இவற்றில் எல்70 மற்றும் ஜூ-23 எம்எம் ஆகியவற்றை அவற்றின் அடுத்த கட்ட மேம்பாட்டு அமைப்புகளாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு முன்மொழிவு கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நவீன ரக வெடிமருந்துகளும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒசா-ஏகேவுக்கு பதிலாக க்யூஆர்எஸ்ஏஎம் எனும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விரைவாக செயல்படும் வான் ஏவுகணை அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த 5 மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். இதுதவிர, டிரோன்களை கண்காணித்து தாக்கி அழிக்க எல்எல்எல்ஆர் ரேடார்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

The post வான் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய பீரங்கிகள், சக்திவாய்ந்த ரேடாரை அதிகரிக்க திட்டம்: ராணுவம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: