திமுக ஆட்சியில் இருந்தவரை அனுமதிக்கவில்லை நீட் தேர்வில் மாணவர்களுக்கு துரோகம் செய்தது அதிமுக: பொன்குமார் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த 2011ம் ஆண்டு வரையில் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்ட பெருமை அன்றைய முதல்வர் கலைஞருக்கு உண்டு. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் திமுக அரசின் வழியில் அதிமுக ஆட்சி காலத்திலும் நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கவில்லை. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகுதான் இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்தது. அதிமுகவினரும், அண்ணாமலையும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக, மாணவர்களை ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அதிகாரம் மோடி அரசை சார்ந்ததாகும். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து நீட் தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நீட் தேர்வில் மருத்துவ கல்லூரியில் இடம் பிடிக்க முடியாத குரோம்பேட்டை மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் தான் ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அழுத்தம் கொடுப்பதற்காக நீட் தேர்வு சம்பந்தமான அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இதற்கு பிறகாவது ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் சட்டத்திற்கு ஒப்புதலை அளித்து மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

The post திமுக ஆட்சியில் இருந்தவரை அனுமதிக்கவில்லை நீட் தேர்வில் மாணவர்களுக்கு துரோகம் செய்தது அதிமுக: பொன்குமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: