அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2020 வரை சாலைகள் பராமரிப்பு பணிக்கு ஒதுக்கிய ரூ.3,598.39 கோடி திருப்பி ஒப்படைப்பு: சிஏஜி அறிக்கையில் அம்பலம்

சென்னை: அதிமுக ஆட்சியில் கடந்த 2016-20ம் ஆண்டு வரை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3598.39 கோடி நிதி பயன்படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிட மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு, நபார்டு வங்கிக் கடனுதவி மூலம் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அவை மாநில வரவு செலவு திட்ட மதிப்பீட்டின் மூலம் கன அதிகாரிகளுக்கு விடுவிக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைகள் துறை மாநில சாலைப் பணிகளுக்கு ரூ.45,324 கோடிக்கு முன்மொழிவுகளை அனுப்பியது. ஆனால் அரசு ரூ.36,067 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. இருப்பினும் சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்கும் ஒப்பளிப்பு செய்யப்பட்ட நிதியைக் கூட துறை முழுமையாக பயன்படுத்தவில்லை. இதனால், வரவு செலவு திட்ட மதிப்பீட்டுக்கான சேமிப்பு 2016-17ல் ஐந்து சதவிகிதமானது 2019-20ல் 22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டில் நிறைவு பெறாமல் எஞ்சியுள்ள பணிகளைச் செய்வதற்கு அரசு வரவு செலவு திட்டத்தில் எந்த நிதியையும் ஒதுக்காததால், கள அலுவலகங்கள், புதிய பணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டை வரவு செலவு கையேட்டு விதிகளை மீறி நிறைவு பெறாமல் எஞ்சியுள்ள பணிகளைச் செய்வதற்கு திருப்புகை செய்தன. 2016-17 முதல் 2019-20 வரை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூ.3598.39 கோடி பயன்படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டது நெடுஞ்சாலைகள் துறையின் விவேகமற்ற நிதி மேலாண்மையை காட்டுகிறது.

2016-21ம் ஆண்டில் சாலைகளுக்கான ஆதி திராவிட துணைத் திட்டத்தின் உள் ஒதுக்கீட்டின் சதவிகிதம் 7.12லிருந்து 1.87 சதவிகிதமாகக் குறைந்ததுடன் நிதி ஒதுக்கீட்டின் போது, 40 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆதி திராவிட மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2020 வரை சாலைகள் பராமரிப்பு பணிக்கு ஒதுக்கிய ரூ.3,598.39 கோடி திருப்பி ஒப்படைப்பு: சிஏஜி அறிக்கையில் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: