×

அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிபுணர்களுக்கு அமெரிக்காவின் கோல்டன் ஆப்பிள் விருது

சென்னை: அமெரிக்காவின் ஏஎஸ்சிஆர்எஸ் வருடாந்திர கூட்டத்தில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கோல்டன் ஆப்பிள் விருது பெற்றுள்ளனர். கண் புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க சங்கத்தின் வருடாந்திர கூட்ட நிகழ்வில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வாலுக்கு உலகளவில் கவுரவம் மிக்க ‘கோல்டன் ஆப்பிள் விருது-2023’ வழங்கப்பட்டிருக்கிறது. கண்விழிப்படல குறைபாட்டை சரி செய்வதற்கான புதிய உத்தியினை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் அஸ்வின் கண்டறிந்து செயல்படுத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில், வருடாந்திர கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகளவில் எண்ணற்ற கண் மருத்துவர்கள் கலந்துகொள்ளும் மிகப்பெரிய கண் சிகிச்சை தொடர்பான மாநாடுகளுள் ஒன்று என்ற பெருமை வருடாந்திர கூட்டத்திற்கு இருக்கிறது. அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கின்ற மருத்துவ சிகிச்சை, அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவ நிர்வாக அம்சங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விவாதிப்பது ஏஎஸ்சிஆர்எஸ்-ன் வருடாந்திர மாநாட்டுக் கூட்டத்தின் நோக்கமாகும்.

அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் புரை மற்றும் கண் அழுத்த நோய் சிகிச்சை துறையின் முதுநிலை ஆலோசகர் டாக்டர் சூசன் ஜேக்கப் ஆகியோர் சிஏஐஆர்எஸ் மீதான திரைப்பட திருவிழா விருதினை பெற்றுள்ளனர். கூம்புக் கருவிழி அல்லது கூம்பு வடிவ கருவிழிப்படலம் போன்ற பாதிப்பு நிலைகளினால் பார்வைத்திறனை இழந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சமீபத்தில் புதுமையான உத்தியை கண்டுபிடித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

The post அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிபுணர்களுக்கு அமெரிக்காவின் கோல்டன் ஆப்பிள் விருது appeared first on Dinakaran.

Tags : Agarvales Eye Hospital ,Chennai ,ASCRS Annual Meeting ,United ,States ,Dr. Agarwals Eye Hospital ,Agarwals Eye Hospital ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...