தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி விசிட் அடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவும், திருச்சி விமான நிலைய 2வது முனையத்தையும் திறந்து வைக்கவும் பிரதமர் மோடி வந்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் 19ம் தேதி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்றார். பின்னர், திருச்சி ரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு சென்று வழிபட்டார். மீண்டும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மதுரை சென்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து அன்றிரவு அங்கேயே தங்கினார். மறுநாள் காலை தூத்துக்குடி சென்று குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லையில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மீண்டும் கடந்த 4ம் தேதி தமிழகம் வந்த மோடி, கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் சென்னை வந்த மோடி நந்தனத்தில் நடைபெற்ற பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில், மீண்டும் 4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர உள்ளார். அதன்படி, வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார். 19ம் தேதி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் சேலம், நாமக்கல்,கரூர் நாடாளுமன்ற தொகுதியை ஒருங்கிணைத்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். 20ம் தேதி கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பாஜ தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது, கன்னியாகுமாரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். 22ம் தேதி மதுரைக்கு செல்லும் மோடி, அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மோடி பங்கேற்கும்பொதுக்கூட்டத்தில் அண்ணாமாலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 76 நாட்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 5 முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி மக்களை சந்தித்து ஆறுதல் கூற வரவில்லை. தமிழக அரசு சார்பில் கேட்ட நிவாரண தொகையிலும் ஒரு பைசா கூட தரவில்லை. சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை வந்த மோடி மக்களை சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜ கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு சென்றார். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் ஓட்டுக்காக தமிழ்நாட்டுக்கு பலமுறை ஓடோடி வருகிறார். 4 முறை தமிழ்நாட்டுக்கு வந்து உள்ள பிரதமர் மோடி சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மீண்டும்.. மீண்டும்.. தமிழகம் வருகை… மோடி பயணம் appeared first on Dinakaran.