ஆப்ரிக்காவில் உயிர்களை பலிவாங்கி உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை: எப்படியெல்லாம் பரவுகிறது? தப்பிப்பது எப்படி?

ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மையை உலகாளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து காங்கோ நாட்டில் 14,000 பேருக்கு குரங்கம்மை பரவி 450 பேர் பலியாகினர். இதற்கு முன் நோய் பரவாத காங்கோவின் அண்டை நாடுகளான புருண்டி, ருவாண்டா, உகாண்டா, கென்யா போன்ற நாடுகளிலும் குரங்கம்மை நோய் தொற்று பரவி இருக்கிறது. இதுவரை ஆப்ரிக்காவை தாண்டி பிற நாடுகளில் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், அஜாக்கிரதையாக இருந்தால் 2022ல் ஏற்பட்டதைப் போன்ற விபரீதம் மீண்டும் உலக நாடுகளை பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பொது சுகாதார நெருடிக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

* வைரசின் ஆரம்பம்
எம்பாக்ஸ் வைரஸ் முதலில் 1958ல் குரங்குளிடம் கண்டறியப்பட்டது. பின்னர் முதல் முறையாக 1970ல் மனிதனுக்கு பரவியது. சின்னம்மையை ஏற்படுத்தும் வைரசின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை வைரசே குரங்கம்மையை ஏற்படுத்துகிறது.

* அறிகுறிகள் என்ன?
குரங்கம்மை பாதித்தால் காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி ஏற்படும். காய்ச்சலைத் தொடந்து முதலில் முகத்திலும் பின்னர் உடலின் மற்ற பகுதிகளிலும் தடிப்புகள் ஏற்படும். இந்த தடிப்புகள் அரிப்பும் வலியையும் ஏற்படுத்தும். சிறு கொப்புளங்களாக மாறி, இறுதியில் உதிர்ந்து விடும். இந்த தொற்று 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீடித்து தானாக குணமாகி விடும்.

* எப்படி பரவும்?
பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருக்கமான பழகுதல், தொட்டுப் பேசுதல், அருகில் அமர்ந்து பேசுதல் போன்றவற்றால் குரங்கம்மை பரவுகிறது. காங்கோவில் உடலுறவு மூலமாக குரங்கம்மை அதிகளவில் பரவி உள்ளது. காயங்கள், மூச்சுக்குழல், கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகவும் இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. இந்த வைரஸ் ஒட்டியிருக்கும் படுக்கைகள், ஆடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதன் மூலமும் குரங்கம்மை ஏற்படும்.

* தப்பிப்பது எப்படி?
கொரோனா காலகட்டத்தில் கூறிய அதே தற்காப்பு நடவடிக்கைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைகளை கழுவுதல், சுத்தமாக இருத்தல் மூலம் குரங்கம்மையிலிருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ், சில நேரங்களில் உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும். குறிப்பாக இந்த அம்மை நோய் குழந்தைகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

* 2022ல் என்ன நடந்தது?
கடந்த 2022ல் குரங்கம்மை நோய் முதல் முறையாக ஆப்ரிக்க கண்டத்தை தாண்டி ஐரோப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். வாரத்திற்கு 6,000 பேருக்கு குரங்கம்மை பரவியது. சுமார் 200 பேர் பலியாகினர். அப்போதுதான் முதல் முறையாக குரங்கம்மைக்கான தடுப்பூசியின் அவசியத்தை உலகம் உணர்ந்தது. இதற்கான தடுப்பூசிகள் ஒரு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.

* வைரஸ் வகைகள்?
குரங்கம்மை வைரஸ் க்ளாட் 1 மற்றும் க்ளாட் 2 என வகைகளைக் கொண்டுள்ளது. இதில் க்ளாட் 2ஐக் காட்டிலும் க்ளாட் 1 அதிகமான உயிர்பலியை ஏற்படுத்தக் கூடிய வீரியம் கொண்டது. காங்கோவில் தற்போது வேகமாக பரவி வருவது க்ளாட் 1 வகை வைரஸ். இது, ஆப்ரிக்காவை தாண்டி உலக நாடுகளில் பரவத் தொடங்கினால் பலி எண்ணிக்கை பெரிய அளவில் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

* இந்தியாவில் பரவியதா?
இதுவரை குரங்கம்மை இந்தியாவில் யாருக்கும் பரவவில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

The post ஆப்ரிக்காவில் உயிர்களை பலிவாங்கி உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை: எப்படியெல்லாம் பரவுகிறது? தப்பிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: