- உதவி ஆணையாளர்
- தொழிலாளர்
- துறை
- ஊட்டி
- நீலகிரி மாவட்டம்
- நீலகிரி மாவட்டம் குன்னூர் தொழிலாளர் நலத்துறை
- தின மலர்
*தொழிலாளர் துறை உதவி ஆணையர் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் எடை தராசுகள் முறைப்படி முத்திரையிட்டு பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் தொழிலாளர் நலத்துறை (அமலாக்கம்) அலுவலகத்தில் துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் துறை சார் அலுவலர் விக்ரம் ஆதித்தன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் டேவிட், மகேந்திரபூபதி, குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஆல்துரை, கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் முகமது சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் பேசும்போது: பால் உள்ளிட்ட பொட்டல பொருட்களில் அச்சிட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கும் வணிக நிறுவனங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித தகவலும் இல்லாமல் பொட்டலமிட்டு பொருட்கள் விற்பனை செய்வதால் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருட்களின் விலை பட்டியல் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். எடை கருவிகள் முத்திரை இடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி சரியான எடையளவு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சீன பொருட்கள் விற்பனை, தரமற்ற பல்புகள் விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை எடை போட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் பேசுகையில், ‘‘உதகை, கோத்தகிரி, குந்தா, கூடலூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எடை தராசுகள் முறைப்படி முத்திரை வைக்கப்பட்டு பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. கடைகளில் விலைப்பட்டியல் வைக்க அறிவுரை வழங்கப்படும்.
அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது தவறு. பல கடைகளில் பால் உள்ளிட்ட பொருட்களும் அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளபடும். சீன பொருட்கள் குறைந்த விலை என வாங்குவதை நுகர்வோர்கள் (மக்கள்) தவிர்க்க வேண்டும். இதனால் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
வணிக நிறுவனங்களில் சீன பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க அறிவுரை வழங்கப்படும். நுகர்வோர்கள் எடை மற்றும் அளவுகள் சரியாக உள்ளதா என்பதை பார்த்து வாங்கும் உரிமை உள்ளது. வாங்கும் போது அதனை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
The post மாவட்டத்தில் எடை தராசுகளில் முறைப்படி முத்திரை வைத்து பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.