×

பாக். எல்லையை ஒட்டி எரிசக்தி பூங்கா; அதானிக்காக தேச பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திய ஒன்றிய அரசு: காங்கிரஸ் கடும் கண்டனம்

 

புதுடெல்லி: அதானி குழுமம், குஜராத்தின் கட்ச் பகுதியின் கவ்டாவில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெறும் 1 கிமீ தூரத்தில் அமைப்பதற்காக, எல்லை பாதுகாப்பு நெறிமுறைகளை ஒன்றிய பாஜ அரசு தளர்த்தியிருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது அறிக்கையில், ‘‘பாஜவின் போலி தேசியவாதம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் கோடீஸ்வரர்கள் பயனடைய வேண்டுமென்பதற்காக, பிரதமர் மோடி நாட்டின் எல்லைகளில் தேச பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். எல்லை பாதுகாப்பு விதிகளை தளர்த்துவதன் மூலம் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைக்கு அருகில் வெறும் 1 கிமீ தூரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தை உங்கள் அன்பு நண்பருக்கு பரிசாக அளித்துள்ளீர்கள் என்பது உண்மையா? பாகிஸ்தான் எல்லை மட்டுமல்லாமல், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாள எல்லையை ஒட்டிய நிலத்திலும் உங்கள் அரசு இத்தகைய விதிகளை தளர்த்தி உள்ளது. இந்த விஷயத்தில் ராணுவத்தின் கவலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கேட்ட அதே கேள்வியை நாங்களும் கேட்கிறோம். இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் இருந்து எளிதில் தாக்கும் தூரத்திற்கு மிகப்பெரிய தனியார் திட்டத்தை ஏன் அனுமதிக்கிறீர்கள்?’’ என கேட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘‘தேச பாதுகாப்பை சமரசம் செய்யும் இத்தகைய கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது என்பதை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் விளக்க வேண்டும். இது அனைத்து ராணுவ விதிமுறைகளுக்கும் எதிரானது’’ என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘ தேசத்தின் பாதுகாப்பை விட தனிநபரின் வணிக நலன் பெரியதா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post பாக். எல்லையை ஒட்டி எரிசக்தி பூங்கா; அதானிக்காக தேச பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திய ஒன்றிய அரசு: காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pak. Energy park ,Union government ,Adani ,Congress ,New Delhi ,Adani Group ,Kowda ,Kutch region of ,Gujarat ,Pakistan ,Border Security… ,. Energy park ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10...