×
Saravana Stores

கல்வி, சுகாதாரம், மின்சார துறைகளில் சாதனை நாட்டுக்கே வழி காட்டுகிறது டெல்லி அரசு: சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: ‘கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சார துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம், ‘டெல்லி மாடல் அரசு’ வழிகாட்டிக் கொண்டிருக்கிறது,’ என சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் நேற்று பேசியதாவது: டெல்லியில் கடந்த 75 ஆண்டுகளில் செய்யப்படாத பல்வேறு பணிகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. இன்று, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி மாடல் அரசு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி மற்றும் மின்சாரம் ஆகிய 3 துறைகளில் ஆம் ஆத்மி அரசு பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த 5 லட்சம் மாணவர்கள், அந்த பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க முடியும் என்றால், அதை நாடு முழுவதிலும் கூட செய்ய முடியும். அப்படி இருக்கையில், பல்வேறு மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன? டெல்லியை தவிர, நாடு தற்போது தனியார் மயத்தை நோக்கி கல்வி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 17 லட்சம் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க ரூ.5 லட்சம் கோடி மட்டுமே போதும்.

ஒன்றிய அரசின் ஆயுஸ்மான் பாரத் சுகாதார திட்ட காப்பீடு திட்டத்தை டெல்லியில் அமல்படுத்தும்படி ஆளுநர் சக்சேனா வலியுறுத்தி வருகிறார். இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இந்த காப்பீட்டை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? அரசு மருத்துவமனைகளை மூடி விட்டு, இந்த காப்பீடு அட்டையை மக்களுக்கு அளித்தால் அவர்கள் எங்கே போவார்கள்? தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களை அனுப்புவதே இந்த திட்டத்தின் நோக்கம். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல், டெல்லியில் தடையின்றி மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கல்வி, சுகாதாரம், மின்சார துறைகளில் சாதனை நாட்டுக்கே வழி காட்டுகிறது டெல்லி அரசு: சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi government ,Kejriwal ,Legislative ,Assembly ,New Delhi ,Delhi Model Government ,Chief Minister ,Legislative Assembly ,Delhi ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்