கரு கலைப்புக்கு அனுமதி வழங்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை: அரசிதழில் வெளியீடு

சென்னை: கருவில் வளரும் சிசுவை கலைக்க அனுமதி வழங்குவதற்காக தமிழகத்தின் 32 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வாரியம் அமைப்பதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது: மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்கென தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களை பரிசோதித்து சிசுவைக் கலைப்பதற்கான கருத்துகளை அந்த வாரியம் 3 நாட்களுக்குள் வழங்கும். அதேபோன்று போதிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கவும் அந்த வாரியத்திற்கு அதிகாரம் உண்டு.

தமிழ்நாட்டில் மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் இதற்கென செயல்படுவதால் விண்ணப்பங்களின் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாத நிலை இருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது. அதனை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 32 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனித்தனியே கருக் கலைப்புக்கான அனுமதி வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கல்லூரிகளின் முதல்வர் தலைமையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், பச்சிளம் குழந்தைகள் நலன், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன், குழந்தைகள் நரம்பியல் நலன் ஆகிய துறைகளின் தலைவர்களும், மனநல ஆலோசகர்களும், மருத்துவக் கண்காணிப்பாளரும், சிசு நல சிகிச்சை இணை பேராசிரியரும் அந்த வாரியத்தில் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய முடிவை வழங்குவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கரு கலைப்புக்கு அனுமதி வழங்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: