சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோதயாவை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து அதே வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு முடிவில் அவரையும் கைது செய்தது. அவர்களை தொடர்ந்து, அந்த கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கான் தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஓக்லாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், டெல்லி வக்பு வாரியத் தலைவராக இருக்கிறார். வாரியத்தில் முறைகேடாக நியமனம் நடந்ததாகவும் அதன் மூலமாக பல கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமனத்துல்லா கான் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. அதே சமயம், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் விசாரணை அமைப்புகள் மூலமாக ஒன்றிய பாஜக அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: