புரெவி புயல் முன்னெச்சரிக்கை பணி நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு

வள்ளியூர்,டிச.3: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடற்கரை கிராமங்களில் 7 புயல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த முகாம்களில் புயல் தடுப்பு களப்பணியாளர்கள், தீயணைப்பு படையினர், காவல்துறை அதிகாரிகள், பொதுப்பணிதுறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட சிறப்பு அதிகாரி கருணாகரன், நெல்லை கலெக்டர் விஷ்ணு, எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் வெள்ள தடுப்பு முகாம்களை பார்வையிட்டனர். மேலும் நாங்குநேரி, தெற்கு விஜயநாராயணம் பெரிய ஏரிகளில் நீர் இருப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையிட்டனர்.பின்னர் சிறப்பு அதிகாரி கருணாகரன் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் 7 புயல் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புயல், வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்களுக்கு தங்குமிட வசதி, தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பெரிய ஏரிகள், குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர் இருப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது’ என்றார்.

Related Stories: