×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்த ஏற்பாடு

திருவண்ணாமலை, டிச.1: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள், கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு மாற்றாக, செல்போன் மூலம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், நேரில் வந்து மனுக்கள் அளிப்பதையே பொதுமக்கள் விரும்புகின்றனர்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வாராந்திர குறைதீர்வு கூட்டத்துக்கு வரும் பொதுமக்களிடம் நேரிலும் மனுக்கள் பெறப்பட்டன. அதனால், பொதுமக்களின் வருகை ஒவ்வொரு வாரமும் அதிகரித்தது.இந்நிலையில், புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பொறுப்பேற்ற பிறகு, செல்போன் மூலம் மட்டுமே குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள், அவசர உதவிகள் தேவைப்படுவோரிடம் மட்டுமே கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்வு மனுக்களை செலுத்துவதற்கான பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர்.இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், கலெக்டரிடம் நேரில் மனு அளிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : meeting ,Office ,Thiruvannamalai Collector ,
× RELATED செக்கானூரணியில் ஸ்டாலின் பங்கேற்கும் கிராமசபை கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்