பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 500 கிலோ நெய்யில் மகா தீபம் ஏற்றப்பட்டது

பெரியகுளம், நவ. 30: பெரியகுளம் அருகே, கைலாசநாதர் மலைக்கோயிலில் நேற்று மாலை திருக்கார்த்திகை தீபம் 500 கிலோ நெய்யில் ஏற்றப்பட்டது.பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அடுத்து, இக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலத்தை போல, இக்கோயிலிலும் கிரிவலம் செல்வர்.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கைலாசநாதர், நந்திகேஷ்வரருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் 500 கிலோ நெய் கொண்ட அகண்ட தீப மண்டபம் அமைக்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு பௌர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு மாலை 6 மணி முதல் ஸ்ரீ குருதட்சிணாமுர்த்தி சேவா சங்க கவுரவ ஆலோசகர் சரவணன்-சித்ரா ஆகியோர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலுக்கு செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேஷ், தக்கார் சந்திரசேகரன், அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். தேனி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: