×

பாஜ, இந்து முன்னணியினர் சாலை மறியல் முயற்சி போலீசார் சமரசம் ஆரணியில் பாஜ கொடி கம்பத்தில் காலணி கட்டிய சம்பவம்

ஆரணி, அக்.29: ஆரணியில் பாஜ கொடி கம்பத்தில் காலணியை கட்டி தொங்கவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜ மற்றும் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பாஜ கொடி கம்பத்தில், மர்ம நபர்கள் ஒற்றை காலணியை கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த டிஎஸ்பி கோடீஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பாஜ மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், 2 நாட்களில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று, பாஜ மற்றும் இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, ஆரணி பழைய பஸ் நிலையம் பகுதியில் டிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பாஜ நகர தலைவர் புவனேஷ் தலைமையில் பாஜவினர், ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில், ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே பாஜ கொடி கம்பத்தில் மர்ம நபர்கள் ஒற்றை காலணியை கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதனால் மனஉளைச்சலும், மனவேதனையும் அடைந்துள்ளோம்.

இந்த செயல் எங்களது உணர்வுகளை அவமானப்படுத்தும் விதமாகவும், கட்சி பிளவு மற்றும் பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாஜ கொடி கம்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : Bajaj ,Samarasam Arani ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி