×

வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

விருத்தாசலம், அக். 23: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் சர்க்கரை ஆலையில்,  பணிபுரிபவர்களுக்கு என 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்நிலையில் கொளஞ்சியப்பன்(56) என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில்  கொளஞ்சியப்பர் விரைந்து வந்து வீட்டை பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு பவுன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இதுகுறித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருகில் சிக்கந்தர் சிங் என்பவர், இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது வீட்டின் வெளி தாழ்ப்பாளை மர்மநபர்கள் பூட்டி சென்றுள்ளனர். விடிந்ததும் சிக்கந்தர் சிங் வீட்டின் கதவை திறக்க முடியாமல் அவதிப்பட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வந்து வெளி தாழ்ப்பாளை திறந்த பின் வெளியே வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் வீடு மற்றும் பைசன் ராஜ் ஆகியோரது வீடுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  

 மர்மநபர்கள் சிக்கந்தர் சிங் வெளியே வராதபடி தாழ்ப்பாளை போட்டு விட்டு அருகில் இருந்த வீடுகளை திறந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பைசன் ராஜ் வீட்டில் எதுவும் இல்லாததால், கொளஞ்சியப்பன் வீட்டில் மட்டும் இருந்த பொருட்களை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த பெண்ணாடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house bureau ,jewelery ,
× RELATED கஞ்சா வளர்த்த விவசாயிக்கு போலீசார் வலை