×

கல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி, அக். 21: கல்வராயன்மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலையடிவாரத்தில்  கோமுகி அணை உள்ளது.  இந்த அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் அணையின் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே நீரை சேமித்து வைக்கின்றனர். மேலும் அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா நதியுடன் கலக்கிறது.
இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய பாசன கால்வாய் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கல்வராயன்மலைப் பகுதியில் செப்டம்பர் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக  கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளவை எட்டியது. இதனால் பாசன விவசாயிகளின் நலன்கருதி கோமுகி அணையின் முதன்மை கால்வாயிலும், கோமுகி ஆற்றிலும் கடந்த அக்டோபர் 1ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மலையில் பெய்த கனமழையால்  கோமுகி அணைக்கு நீர் வரும் பொட்டியம், மாயம்பாடி, கல்பொடை உள்ளிட்ட ஆறுகளில் இருந்து 1300 கனஅடி நீர் வரத்து இருந்தது. ஏற்கனவே அணை நிரம்பி இருந்ததால், கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து  கோமுகி அணையில் இருந்து   1300 கனஅடி உபரி நீரை பொதுப்பணித்துறையினர் அபாய சங்கு ஒலித்து ஆற்றில் திறந்துவிட்டனர்.

Tags : Kalwarayanmalai ,Gomukhi Dam ,
× RELATED கண்ணீர் வடிக்கும் கல்வராயன்மலை...