×

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது அமைச்சர் சண்முகம் தகவல்

விழுப்புரம், அக். 16: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு, கல்லூரி பயிலும் மற்றும் சுயதொழில் புரியும் 45 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்கள், செவித்திறன் குறைபாடுடைய 10 பேருக்கு நவீன காதொலி கருவிகளை வழங்கினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், பல்கலைக் கழகத்தை பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து பெற வேண்டி பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப் பேரவையிலும் இதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். எந்த நிலையிலும் எந்த சூழலிலும் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுக்கு பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்றுக் கொள்ளாது. சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள ஷரத்துகள் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்க கோரியபோது விளக்கமளிக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாகத் தொடர்பு கொண்டு நாங்களே நிதியாதாரம் திரட்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். எந்த வகையிலான நிதியாதாரம் என தெரியவில்லை. துணைவேந்தரின் இந்த ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது, என்றார்.

Tags : Shanmugam ,government ,Tamil Nadu ,Vice Chancellor ,Anna University ,
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை