×

விவசாயி சரமாரி வெட்டி கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலை செங்கம் அருகே பயங்கரம்

செங்கம், செப்.25: செங்கம் அருகே விவசாயி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(51), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், அருகே உள்ள தங்களது நிலத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில், நடராஜனின் நிலம் வழியாக சென்ற பக்கத்து நிலத்துக்காரர்கள், ரத்த வெள்ளத்தில் நடராஜன் கிடப்பதை கண்டனர். அருகே சென்று பார்த்தபோது, தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, உடனடியாக செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், எஸ்பி அரவிந்த், டிஎஸ்பி சரவண குமரன், செங்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோப்ப நாய் மியா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசாரால் துப்புத்துலக்கப்பட்டது.மேலும், இதுகுறித்து நடராஜனின் மகன் சீனிவாசன்(28) அளித்த புகாரின்பேரில், செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, நடராஜனை கொன்றவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலையான நடராஜனுக்கு மனைவி, 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

Tags : Mystery ,assassins ,
× RELATED தரமற்ற விதைகளால் இயல்பு தன்மை மாறி விளைந்த பீர்க்கன்காய்: விவசாயி புகார்