கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு குறுகியகால கல்வெட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 13:  கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் 50 பேருக்கு, குறுகியகால கல்வெட்டு பயிற்சி வழங்கப்பட்டது. முதல் நாளான கடந்த 10ம் தேதி பயிற்சியின் துவக்க விழா நடந்தது. அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சரவணகுமார், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முதல் நாளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்றும் வரலாற்றுக் காலம் குறித்த வரையறை, எழுத்துக்களின் தோற்றம் மற்றும் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழி எனும் எழுத்துக்களை தாமே எழுதி, படிக்க கற்றுத்தரப்பட்டது.

2ம் நாளான நேற்று முன்தினம்(11ம் தேதி) தமிழியிலிருந்து வளர்ந்த வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டாக வளர்ந்த விதத்தை காப்பாட்சியர் உதாரணங்களுடன் விளக்கி, பயிற்சி அளித்தார். 3ம் நாளான நேற்று(12ம் தேதி) அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டை படியெடுத்து, படிக்கும் பயிற்சியும், பயிற்சி முடிவில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கல்வெட்டு பயிற்சியை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Stories: