×

கன மழை, பலத்த காற்று வீசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் கைரிவிப்பு

நாகர்கோவில், பிப்.28: குமரி மாவட்டத்தில் தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது என்று விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் அதிகாரி தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை தின கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ் பல்வேறு துறை அதிகாரிகள் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்  பலர் கலந்துகொண்டனர். புலவர் செல்லப்பா: பொதுப்பணித்துறை சார்பில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குமரி மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக பேச்சிப்பாறை அணையை தூர்வாரக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கிருந்து திட்டங்கள் பொதுப்பணித்துறையால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

டிஆர்ஓ: பேச்சிப்பாறை அணையை தூர்வாரும் திட்டம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட எல்லா திட்டங்களின் விவரங்களையும் இங்கு வெளிப்படையாக கூறமுடியாது.புலவர் செல்லப்பா: குமரி மாவட்டத்தில் தென்னையை நோய் தாக்குவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தோட்டக்கலை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?இணை இயக்குநர் சத்தியஜோஸ்: குமரி மாவட்டத்தில் தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி மருந்து தெளிக்க கூடாது. அதனால் நோய் கட்டுப்படாது, பாதிப்புதான் உருவாகும். மஞ்சள் ஒட்டுமுறை மூலம் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். இதை அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். ஒரு தோட்டத்தில் செய்து அருகில் உள்ள தோட்டத்தில் செய்யாவிட்டால் பலன் இல்லை. இது தொடர்பாக விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் தென்னையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. நமது காலநிலை, இயற்கை சூழல் மாற வேண்டும். நன்றாக மழை பெய்தல் அல்லது பலத்த காற்று வீசினால் தான் இந்த பூச்சியை கட்டுப்படுத்த முடியும். உயரமான பம்ப்கள் கொண்டு தண்ணீரை தென்னை ஓலைகளில் பீச்சியடித்தும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கூட்டு பண்ணையம் திட்டத்தில் அதற்கான ஸ்பிரேயர் வாங்குவதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.  

புலவர் செல்லப்பா: ஏற்கனவே பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய தென்னை மரம் நடவு செய்ய மானியம், இழப்பீடு வழங்க வேண்டும்.டிஆர்ஓ: இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.டிஆர்ஓ: குமரியில் அரசு புறம்போக்கு நிலங்கள் குறைவாக உள்ளது. எனவே குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்று இடம் தேர்வு செய்யாமல் குடிசை வீடுகளை காலி செய்ய முடியாது.புலவர் செல்லப்பா: ஊட்டு கால்வாய் பராமரிப்பு பணிகளை வேளாண் பொறியியல் துறை மேற்கொள்ளாமல் இருப்பது ஏன்?கலெக்டர்: வேளாண் பொறியியல் துறைக்கு ஊட்டுகால்வாய் பராமரிப்புக்கு என நிதி ஒதுக்கீடு இல்லை. அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தோவாளை சானலில் தடுப்பணைகள் கட்டும் திட்டங்களை வேளாண் பொறியியல் துறை மேற்கொள்கிறது. விவசாயி: ராஜாக்கமங்கலம் - முட்டம் கிளை கால்வாய்களில் தண்ணீர் முறை வைத்து விடுகின்றனர். இதனால் கடைவரம்பு பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. எனவே தினசரி தண்ணீர் இந்த சானல்களில் விநியோகம் செய்ய வேண்டும். மார்ச் 15ம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வின்ஸ் ஆன்றோ: தாசில்தார் உத்தரவிட்ட பிறகும் குளங்களை தூர்வார பிடிஓக்கள் அனுமதி வழங்கவில்லை. புதிய குளங்கள் பட்டியல் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர்: மேல்புறம் பிடிஒ இன்று மாலைக்குள் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு பாஸ் வழங்கிவிட்டு அதற்கான ஆணையை என்னிடம் வழங்க வேண்டும். அடுத்தவாரத்தில் குளங்கள் பட்டியல் அரசிதழில் வெளியிடும் வகையில் தயார் செய்ய வேண்டும். ஜெகநாதன்: புத்தளம் பகுதியில் கடல் நீர் உட்புகுந்து வருகிறது.
கலெக்டர்: அங்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதனை உடைத்தது ஏன்? மழை பெய்யும்போது கீழே தண்ணீர் செல்ல வேண்டும் எனில் ஷட்டர் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவதாஸ்: வெள்ளிச்சந்தை பி கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் செல்லும் பாசனவாய்க்கால்களை ஜிபிஎஸ் உதவியுடன் நில அளவை மேற்கொண்டு வரைபடத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.அதிகாரி: அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களில் மறு நில அளவை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கல்குளம் தாலுகாவில் மறு நில அளவை பணிகள் நடைபெறும்போது கால்வாய்களிலும் அளவீடு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக பணிகள் நடைபெற்றது. ஆனால் அந்த பகுதிகளில் பின்னர் சிமென்ட் பணிகள் 25 சதவீதமே நடைபெற்றது. 75 சதவீத பணிகள் நடைபெறவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். களியல் பகுதியில் பவர் ஹவுஸ் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. கிசான் கிரெடிட் கார்டு தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

குடியுரிமை சட்ட கோரிக்கையால் பரபரப்பு
விவசாயிகள் குறைதீக்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் திடீரென எழுந்து குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு சக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...