×

தக்கலையில் நடந்த அதிமுகவினர் கோஷ்டி மோதலில் வழக்கு பதிவு செய்ய போலீஸ் தயக்கம்

நாகர்கோவில், பிப்.18 : தக்கலையில் அதிமுகவினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் இதுவரை வழக்கு பதிவு  செய்யாமல் இருப்பது குறித்து காயம் அடைந்த அதிமுக நிர்வாகி டிஜிபி வரை புகார் மனு அனுப்பி உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுகவில் இப்போது தாறுமாறாக கோஷ்டி பிரச்சினை வெடித்துள்ளது. குமரி மாவட்டத்தில் நிலவி வரும் கோஷ்டி பிரச்னை சமீபத்தில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் எதிரொலித்தது. கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்ட குமரி மாவட்ட அதிமுகவை சேர்ந்த சிலர், தற்போது முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி திடீரென கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கடந்த 14ம்தேதி மரணம் அடைந்தார். தக்கலையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சமயத்திலும் அதிமுகவினர் இடையே மீண்டும் கோஷ்டி பிரச்சினை தலை தூக்கியது. நடுரோட்டில் இவர்களின் சண்டையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் திங்கள்சந்தையை சேர்ந்த ராஜசேகர், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்ததாக கூறி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்துக்கு புகார் அளிக்க சென்றவர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குபதிவு செய்யவில்லை. மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வரும் ராஜசேகர், ராஜ்குமாரிடம் தக்கலை போலீசார் சென்று வாக்குமூலம் வாங்கி உள்ளனர். ஆனால் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வில்லை.

இந்த நிலையில் ராஜசேகர் தரப்பில், தற்போது உள்துறை செயலாளர், டிஜிபி உள்பட  காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில், எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. ஆன்லைனில் புகார்  அளித்த பின், தக்கலை போலீசார் வந்து என்னிடம் உங்கள் கட்சி பிரச்சினையில் எங்களை சிக்க வைக்க பார்க்கிறீர்கள். எதிர் தரப்பினரிடமும் புகார் வாங்கி, உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்வோம் என கூறி செல்கிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமிரா உள்ளது. அந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தாலே யார், யார் தாக்கினார்கள் என்பது தெரியும். தாக்குதல் நடத்திய எனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை புகாரில் கூறி உள்ளேன். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார்கள் என கூறி உள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, உயர் அதிகாரியிடம் இருந்து எந்த தகவலும் வராமல் வழக்கு பதிவு செய்ய முடியாது. நீங்கள் எது வேண்டுமானாலும், எஸ்.பி. ஆபீசை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி விட்டனர். ஆளுங்கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் மூக்கை நுழைப்பது பெரும் சிக்கலாகி விடும் என்பதால், காவல்துறையும் மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Takala ,clash ,AIADMK ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்