×

உத்தமபாளையம் பகுதியில் அடிக்கடி பழுதாகும் உயரழுத்த மின்கம்பங்கள்

உத்தமபாளையம், பிப். 17: உத்தமபாளையம் பகுதியில் விளைநிலங்கள் வழியாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதால், அவைகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் திணறுகின்றனர். கம்பம் பள்ளதாக்கில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி என அனைத்து ஊர்களிலும் வயல்வெளிகள் அதிகமாக உள்ளன. கடந்த 40 வருடங்களுக்கு முன்பே வயல்வெளிகள் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, உயரழுத்த மின்வயர்கள் செல்கின்றன. ஊருக்கு வெளியில் செல்லக்கூடிய இந்த மின்வயர்களின் மூலம் மின்சார இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் மழை, காற்று காலங்களில் மின்கம்பங்களில் செல்லும் மின்வயர்கள் பழுதாகி விடுகின்றன.

இதனை கண்டுபிடித்து சீரமைக்க மின்சாரவாரிய அதிகாரிகள் திணறுகின்றனர். ஊருக்கு வெளியே செல்லும் மின்வயர்களில் பழுதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வயல்களின் வழியே ஊண்டப்படும் மின்கம்பங்கள் திடீர் காற்று மற்றும் மழையால் பழுதாவது தொடர்கதையாகி வருகிறது. இதனை எந்த இடம் என கண்டுபிடித்து பழுது நீக்குவது மிகவும் சிரமம்’ என்றனர்.

Tags : area ,Uthamapalayam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...