×

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் குப்பைகள் தீ வைத்து எரிப்பு

விழுப்புரம், பிப். 17:  விழுப்புரம் நகரில் பொழுதுபோக்கிற்கென்று இருப்பது நகராட்சி பூங்கா மட்டுமே. தற்போது ரூ.25 லட்சத்தில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட்டுத்திடல் என அனைத்தும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இங்கு தினசரி பொதுமக்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஏற்கனவே, இப்பூங்காவில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மக்கும் குப்பை உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. தினசரி வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டுவந்து தரம்பிரித்து மக்க வைத்து இயற்கை உரத்திற்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட வேண்டும்.ஆனால், நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளையும் இங்கு கொண்டு வந்துவிடுகின்றனர். இதனை, தீவைத்து எரிப்பதால் தினசரி புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகள், கடைகள் என்று அங்கிருப்பவர்களின் சுவாசத்தை அடைத்து பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவு குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பலர் வீடுகளை காலிசெய்து வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி உள்ளிட்டவைகளும் அருகில் உள்ளது. அதையெல்லாம் கவலைப்படாமல் ஊழியர்கள் வேலையை குறைப்பதற்காக தீவைத்து கொளுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், பூங்காவிற்கு வரும் பொதுமக்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி ஆணையர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Villupuram Municipal Park ,
× RELATED ஈரோடு: வீரப்பன்சத்திரம் அய்யன்காடில் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து