×

தோவாளையில் தீ விபத்து 3 கடைகள் எரிந்து சாம்பல்

ஆரல்வாய்மொழி, பிப்.17: தோவாளையில்  நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பலானது. தீ  விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.குமரி மாவட்டம் தோவாளை மெயின்  ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதன் எதிரே தற்காலிக கடைகள் சில  உள்ளன. இங்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர்  பூ மற்றும் வெற்றிலை  பாக்கு கடை நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் ஓட்டல்  நடத்தி வருகிறார். இதேபோல் மகேஷ் என்பவர் இரவு டிபன் சென்டர் நடத்தி வருகிறார்.  இந்த 3 கடைகளும் தகரத்தினால் ஆனது. மேற் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தன.இந்த  நிலையில் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டி  சென்றனர். இந்த கடைகளின் பின்புறம் தோவாளை பெரியகுளத்தில் இருந்து மறுகால்  ஓடை செல்கிறது. இதில் பெருமளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.இந்நிலையில் நள்ளிரவில் ஐயப்பன், மாணிக்கம், மகேஷ் ஆகியோரது கடைகள்  திடீரென தீப்பிடித்து எரிந்தன.

அதிகாலை பூ மார்க்கெட்டில் வேலை  செய்யும் தொழிலாளர்கள் தீ கொளுந்துவிட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர். நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென எரிய  தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து  போராடி   தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 கடைகளிலும் இருந்த அனைத்து  பொருட்களும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ₹3 லட்சம் இருக்கும் என்று  கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர். இந்த தீ விபத்துக்கு  காரணம் நாசவேலையா ? அல்லது மறுகால் ஓடை குப்பைகளில் யாராவது தீ வைத்ததில்,  எதிர்பாராதவிதமாக கடைகளுக்கும் தீ பரவியதா?  என்பது தெரியவில்லை.இது  குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு  கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். மாணிக்கம் என்பவரது ஓட்டலில் தீ  எரிந்த போது கேஸ் சிலிண்டர் இருந்துள்ளது. சிலிண்டர் வெடித்து இருந்தால்  பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு வீரர்கள் மிகவும் சாமர்த்தியமாக  செயல்பட்டு கேஸ் சிலிண்டரை பத்திரமாக வெளியே எடுத்தனர். அதன் பிறகே தீயை  அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : fire ,gates ,shops ,
× RELATED நகராட்சி மார்க்கெட்டில் பொது மக்கள் பயன்படுத்தாத நுழைவு வாயில்கள் மூடல்