லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் போலீசார் அதிரடி வாகன சோதனை

புதுச்சேரி, ஜன. 29: லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் நேற்று போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி வந்த 50 கல்லூரி மாணவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுவை வடக்கு எஸ்பி சுபம் கோஷ் உத்தரவின்பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை விமான நிலைய ரோட்டில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களுக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள் சென்று உரிய அடையாள அட்டை இல்லாமல் கல்லூரி வளாகத்திற்குள் யாரேனும் இருக்கிறார்களா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெளி மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சமீபகாலமாக ஒருசில அசம்பாவிதங்கள் கல்லூரி வளாகத்திற்குள் நடந்ததால் எஸ்பி உத்தரவின்பேரில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை இனியும் தொடரும். அடையாள அட்டை இல்லாமல் கல்லூரி வளாகத்திற்குள் யாரேனும் இருந்தாலோ, பெண்களை கேலி கிண்டல் செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலோ யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் கட்டாயம் வரக்கூடாது. முன்அனுமதி பெற்றுத்தான், முன்னாள் மாணவர்கள் வர வேண்டும். இனிமேல் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று கூறினர்.

Tags : Police Action Vehicle Testing ,Airport Road ,LaSpace ,
× RELATED லாஸ்பேட்டை காவல் நிலையத்தை ஏஐடியுசி தொழிற்சங்கம் முற்றுகை