குடிநீர், விவசாயம் அடியோடு பாதிப்பு இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைக்கு தடை

மரக்காணம், ஜன. 28:      மரக்காணம் அருகே நிலத்தடி நீர் மட்டத்தை அடியோடு பாதிக்கும் இறால் குஞ்சு ெபாறிப்பக தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது கீழ்பேட்டை ஊராட்சி. இப்
பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் காலந்தொட்டு இப்பகுதியில் இருந்துதான் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இங்கு 18 முதல் 25 அடி வரையில் ஆழ்துளை கிணறு அமைத்தாலே குடிநீர் கிடைக்கும் நிலை கடந்த 5 ஆண்டுகள் வரை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த கிராமத்தின் அருகில் கடற்கரை ஓரம் தனி நபர்களுக்கு சொந்தமான இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் பக்குவப்படுத்தி பொறிக்க வைக்கப்படும் இறால் குஞ்சுகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுபோல் செயல்படும் இந்த தொழிற்சாலைக்கு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் இந்த தொழிற்சாலை சார்பில் இப்பகுதியில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பல  லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாக கூறுகின்றனர். இதுபோல் தினமும் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கடல் நீர் உட்புகுந்து விட்டதாக புகார் கூறுகின்றனர்.
மேலும் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தொழிற் சாலை பகுதியில் ஆழ்துளை குழாய்கள் அமைத்து அதில் கழிவுநீர் மற்றும் மாசு கலந்த பொருட்களை விட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு காலந்தொட்டு பயன்படுத்தி வந்த குடிநீரும் உப்பு நீராக மாறிவிட்டதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.

இந்த தொழிற்சாலைக்காக உறிஞ்சப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் இருக்கும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் பாலைவனமாக மாறி வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் தற்போதே குடிநீர் உப்பு நீராக மாறிவிட்டதால் இவர்கள் காசு கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் விவசாயம் முற்றிலும் அழிவதோடு மட்டும் அல்லாமல் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் கூட வெளியிடங்களில் இருந்து லாரிகள் மூலம் எடுத்து வந்து வினியோகம் செய்யும் அவல நிலை உண்டாகும். எனவே கீழ்பேட்டை ஊராட்சியில் கடற்கரை பகுதியில் செயல்படும் இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என்று குடியரசு தினத்தன்று இக்கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Tags :
× RELATED குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீரமுத்தி அம்மன் கோயில் பால்குட விழா