×

பஸ் போக்குவரத்து இல்லாததால் கடும் அவதி ஆசாரிபள்ளம் பாலப்பணி இறுதி கட்டத்தை எட்டியது

நாகர்கோவில், ஜன.24  : ஆசாரிபள்ளம் பன்றி வாய்க்காலில் கட்டப்பட்ட பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருஞ்செல்வவிளை, தோப்பூர்,  வீராணி, ஆளூர், சடையால்புதூர், மேலசங்கரன்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையில், பன்றி வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த பாலத்தை விரிவுப்படுத்தி தர  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உறுதி அளித்து இருந்தார். அதன்படி இந்த பாலத்தை விரிவுப்படுத்தி கட்ட அவர் நடவடிக்கை மேற்கொண்டார். பொதுப்பணித்துறை  சார்பில் ₹98 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்த பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின.

தொடர் மழை, மணல், ஜல்லி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக பாலப்பணி மந்த கதியில் நடந்தது. தற்போது பாலப்பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் இந்த பாலத்தின் இரு பக்கமும் மண் நிரப்பி சாலை  போடப்பட்டு வர்ணம் பூச வேண்டும்.  பணிகளை முடித்து பாலத்தை திறந்தால் உடனடியாக பஸ் போக்குவரத்தும் தொடங்கும். ஆனால் இந்த பணியை முடிக்காமல் தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பஸ்கள் செல்ல முடியாத நிலை  உள்ளது. இந்த வழியாக செல்ல வேண்டிய கிராமங்களுக்கு பஸ், சுற்று வட்டார பாதையில் செல்வதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது.  எனவே உடனடியாக இந்த பால பணிகளை முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Asari Pallum ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...