×

காட்பாடியில் ரயில் பெட்டி விவரங்களை அறிந்துகொள்ள டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க பயணிகள் கோரிக்கை

வேலூர், ஜன.22: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளில் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க வேண்டும், என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி ரயில் நிலையம் வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட தினசரி, வாரந்திர மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் மூலமாக சென்று வருகின்றனர். மேலும், பீகார், மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மருத்துவம், கல்வி, சுற்றுலா போன்றவற்றுக்காக வேலூர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையமானது பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். வணிக ரீதியாக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள காட்பாடி ரயில் நிலையம் உட்பட அனைத்து ரயில் நிலையங்களையும் தரம் உயர்த்த மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள், லிப்ட், கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம்,

குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை, ரயில்கள் வந்து செல்லும் விவரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், பிளாட்பாரங்களின் உயரம், நீளம் அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரயில் நிலைய வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடமாநில ரயில்கள் அதிகளவில் வந்து செல்லும் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் விவரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க வேண்டும், என்று பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் தொலைதூரம் செல்லும் வடமாநில ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், காட்பாடி ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களில் பொதுபிரிவு, முன்பதிவு, ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் எங்கு நிற்கும் என்கிற விவரங்கள் பிளாஸ்டிக் போர்டில் மார்க்கர் பேனாவைக் கொண்டு எழுதப்படுகிறது. சில மணிநேரங்களிலேயே அவை அழிந்துவிடுவதால் ரயில் பெட்டிகளின் விவரங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ரயில் வரும் நேரத்தில் பயணிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உடமைகளை சுமந்து கொண்டு ரயிலை பிடிக்க ஓடுகின்றனர். ஒருசில நேரங்களில் ரயிலை தவறவிடும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால் பணம், நேரம் ஆகியவை விரயமாகிறது. எனவே, காட்பாடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்குமான பொது, முன்பதிவு, ஏசி படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் விவரங்களை அறிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Tags : Katpadi ,Digital Information Board ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி