×

குமரியில் கும்பபூ அறுவடை விரைவில் தொடக்கம் நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

நாகர்கோவில், ஜன. 21:  குமரி மாவட்டத்தில் கும்பபூ அறுவடை பணி தொடங்கவுள்ள நிலையில், மாவட்டத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 5,500 ஹெக்டேர் பரப்பளவில் கும்பபூ நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த பருவமழையால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் நெல்பயிருக்கு போதிய தண்ணீர் கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. காவிரி டெல்டா பகுதியிலும் நெல் சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அங்கு அறுவடை நடந்து வருகிறது. அங்கு 75 கிலோ எடைகொண்ட நெல் மூடை ரூ.1150க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட கும்பபூ அறுவடை இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படவுள்ளது. குறிப்பாக தேரூர், தெள்ளாந்தி, தெரிசனங்கோப்பு, தாழக்குடி உள்ளிட்ட பெரிய பத்துகளில் அறுவடை தொடங்கவுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தில் நெல் மகசூல் அதிகமாக இருப்பதால், அங்கு குறைந்த விலைக்கு நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் குமரி மாவட்டத்திலும் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனை தவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் குமரி மாவட்டத்திற்கு நெல் வருகிறது. இப்படி பல வழிகளில் குமரி மாவட்டத்திற்கு நெல் வருவதால், குமரி மாவட்ட விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த கும்பபூ பருவ நெற்பயிர்கள் அறுவடை இந்த மாதம் கடைசியில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி நெல் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வருடம் கும்பபூ அறுவடை நடந்த போது 9 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த கன்னிப்பூ அறுவடையின்போது மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கோரிக்கை வைக்கும் இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசு கொள்முதல் நிலையத்தில் ஒரு குவிண்டால் நெல் ரூ.1860க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கோட்டை(87 கிலோ) என்ற அடிப்படையில் நெல் மூடை கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நெல்கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்தால், குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு கோட்டைக்கு ரூ.1618 கிடைக்கும். இதனால் அவர்களுக்கு சிறிய லாபம் கிடைக்கும். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது:  தமிழகத்தில் சமீபத்தில் பெய்த பருவமழையால் நெல் விவசாயம் நல்ல நிலையில் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. அங்கு 75 கிலோ எடைகொண்ட நெல் மூடை ரூ.1150க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் விரைவில் கும்பபூ அறுவடை தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் நெல் மகசூல் அதிகமாக இருப்பதால், குமரி மாவட்டத்தில் நெல்லிற்கு போதிய விலை கிடைக்குமா என்பது கவலையாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் அறுவடை தொடங்குவதற்கு முன்பு அரசு நெல்கொள்முதல் நிலையங்களை தொடங்கி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி செய்யும்போது விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கும், விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். என்றார்.

Tags : harvesting ,Kumbabu ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...