செக்கானூரணியில் ரயில்வே ஸ்டேசன் அமைக்க பரிசீலனை விருதுநகர் எம்பிக்கு ரயில்வே அமைச்சர் தகவல்

திருமங்கலம், ஜன.20: திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணியில் ரயில்வே ஸ்டேசன் அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து பரிசீலினை செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை-போடி அகலரயில்பாதை அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தற்போது மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையில் அகலரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக உசிலையிலிருந்து போடி வரையில் பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மதுரையிலிருந்து விரைவில் உசிலம்பட்டி வரையில் ரயில் இயக்கப்படும் என தெரிகிறது. இந்த ரயில்வே பாதை முன்பு மீட்டர் கேஜ்பாதையாக இருந்தபோது மதுரை, நாகமலை, வடபழஞ்சி, செக்கானூரணி, உசிலம்பட்டி, தேனி, போடி என ரயில்வே ஸ்டேசன்கள் இருந்தன. ஆனால் தற்போது அகலரயில் பாதையில் மதுரைக்கு அடுத்தப்படியாக உசிலம்பட்டியில் தான் ரயில்வே ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள நாகமலை, வடபழஞ்சி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே ஸ்டேசன்கள் அமைக்காமல் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செக்கானூரணியில் ஏற்கனவே ரயில்வே ஸ்டேசன் இருந்த இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு செக்கானூரணியில் மீண்டும் ரயில்வே ஸ்டேசன் அமைக்கவேண்டும் எனவும் இதன்மூலமாக ஏராளமான பயணிகள் பயன்அடைவர் எனவும் கடிதம் எழுதினார். எம்பியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் மதுரை செக்கானூரணியில் ரயில்வேஸ்டேசன் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Railway Minister ,Virudhunagar ,railway station ,
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு