சொட்டு நீர் பாசனத்தில் கேரட் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

ஓசூர், ஜன.13: ஓசூர் பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் கேரட் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சீரான சீதோஷ்ண நிலை நிலவுவதால் விவசாயிகள் கொய் மலர்கள், தக்காளி, பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பல ஏக்கர் பரப்பில்  கிணற்று நீர் பாசனத்தில் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தனர். தற்போது, கிணற்று நீர் பாசனத்திற்கு பதில் விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். இந்த முறையில் தற்போது தக்காளி, பீன்ஸ், கோஸ், கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்களின் நடுவில்  களை குறைகிறது. கிணற்று நீர்பாசனத்தில் ஒரு ஏக்கரில் தண்ணீர் பாய்ச்ச குறைந்தது 3  மணி நேரம் பிடிக்கும். ஆனால், சொட்டு நீர் முறையில் இரண்டு போகம் விவசாயம் செய்யலாம். மேலும், உரம் மற்றும் மருந்து உள்ளிட்டவை வீணாகாது என்றனர். தற்போது ஓசூர் பகுதியில் கெலவரப்பள்ளி அணை அருகே புனுகன்தொட்டி, கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் கேரட் சாகுபடி பரப்பினை அதிகரித்துள்ளனர்.

Related Stories: