மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்டத்தில் மானியத்தில் இரு சக்கர வாகன திட்டத்தில் பயன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: அம்மா இருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம், தர்மபுரி மாவட்டத்திற்கு 2019-20ம் ஆண்டிற்கு 2097 பயனாளிகளுக்கு மானியம் வழங்க, தமிழக அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த விதிமுறைகளில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி மேலும் அதிக அளவில் உழைக்கும் மகளிர் பயன்பெற தக்க வகையில், கீழ்கண்ட விதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி தகுதி சான்று இணைக்கப்பட வேண்டியதில்லை. ₹2.5 லட்சம் வரை வருமானமுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் பிற அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களும் பயனடைய முடியும். இந்த புதிய விதி முறைகளை பயன்படுத்தி, தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த உழைக்கும் மகளிர் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: