×

மேகமலையினை பாதுகாப்பதில் பெரும் சிக்கல் மாவட்ட வனத்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை

தேனி, டிச. 13: தேனி மாவட்டம் மேகமலையில் வனத்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளதால் வனத்தை பாதுகாப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் மேகமலைக்கு ஏழு ரேஞ்சர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது மூன்று பணியிடங்கள் மட்டுமே உள்ளன. மீதம் உள்ள நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு உதவி வனப்பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. தவிர 24 கார்டு (வனக்காவலர்) பணியிடங்களும், 33 வாட்சர் பணியிடஙகளும் காலியாக உள்ளன. தற்காலிக பணியாளர்கள் மூலம் தற்போது வனப்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தற்போது வனத்திற்குள் பலத்த மழை பெய்து வருவதால் யாரும் வேட்டைக்கோ, மரம் வெட்டவோ வனத்திற்குள் செல்ல முடியாது. எனவே, மழைக்காலங்களில் வனம் பாதுகாப்பாகவே இருக்கும். கூடுதல் பணியிடங்களை நிரப்ப நாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசும் விரைவில் பணியிடங்களை நிரப்புவதாக உறுதி கொடுத்துள்ளது. எப்படியும் மழைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நாங்கள் பணியிடங்களை நிரப்பி விடுவோம்’ என்றனர். இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், வனத்திற்குள் மழைக்காலத்தில் செல்வது ஆபத்து என்பதால் தற்போது வனக்குற்றங்கள் குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் இவ்வளவு பணியிடங்களையும் நிரப்பி விடுவோம் என அதிகாரிகள் சொல்வது ஏற்புடையதாக இல்லை. தேவைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே வனக்குற்றங்களையும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதையும் தடுக்க முடியும்’ என்றனர்.

Tags : personnel ,District Forest Department ,
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!