ரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை,  டிச. 13: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்திற்கு  உட்பட்ட பகுதியில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து  விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வு பிரிவை  சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி உள்ளிட்ட  குழுவினர் நேற்று முன்தினம் இரவு தொட்டி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கரும்பு  தோட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில்  பதுக்கி வைத்து இருந்த ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் 28  பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும்  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை  செய்து தப்பி ஓடிய  புதுச்சேரியை சேர்ந்த கதிர்வேல், எறையூர் கிராமத்தை  சேர்ந்த தனிஸ்தலாஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து  எலவனாசூர்கோட்டை காவல்நிலைய போலீசார் மற்றும் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு  அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர சாராய வேட்டைகளையும் மீறி புதுச்சேரியில் இருந்து  மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருவது தொடர்கதையாக உள்ளது  இந்த தொடர் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது