×

மூணாறில் தோட்டத் தொழிலாளர்கள் 500 பேருக்கு வீடு கட்ட நிலம்

மூணாறு, டிச.12: மூணாறில் வீடு இல்லாமல் பரிதவித்து வந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிலத்தை குட்டியார்வாலியில் கேரளா வருவாய்த்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் வழங்கினார். மூணாறில் பல வருடங்களாக வீடு கட்ட நிலம் இல்லாமல் தொழிலாளர்கள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் கேரளா இடதுசாரி அரசு அறிவித்த வாழ்க்கை திட்டத்தின் அடிப்படையில், மூணாறில் சொந்தமாக வீடு மற்றும் நிலங்கள் இல்லாத தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்க அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் மூணாறு அருகே அமைந்துள்ள குட்டியார்வாலி பகுதியில் நிலங்கள் ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக 500 பேருக்கு நிலங்கள் அளந்து அதற்கான சான்றிதழ்கள் நேற்று முன்தினம் கேரள வருவாய்த்துறை அமைச்சர் இ.சந்திரசேகரனால் வழங்கப்பட்டது. மீதமுள்ள 1800 பேருக்கு ஜன.31ம் தேதிக்குள் நிலங்கள் அளந்து வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி தலைமை வகித்தார். தேவிகுளம் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன், இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன், தேவிகுளம் துணை கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குட்டியார் வாலி பகுதியில் நிலங்கள் வழங்கியதன் மூலம் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Land ,estate workers ,Munnar ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!