×

வேட்பு மனுதாக்கல் மந்தம்

திருப்பூர், டிச. 12:   வார்டு வரையறை, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் இன்றி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களையிழந்து காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்தில் 265 ஊராட்சிகளின் தலைவர் மற்றும் 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர், 170 ஒன்றிய கவுன்சிலர், 17 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 2,747 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்க உள்ளது. ஊரகத்தில் உள்ள 9 லட்சத்து, 95 ஆயிரத்து 765 வாக்காளர் மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், நேற்று (9ம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. 16ம் தேதி வரை, வேட்பு மனுதாக்கல் நடக்கும். ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, ஊராட்சி அலுவலகம், ஒன்றிய கவுன்சிலர் (வட்டார ஊராட்சி பி.டி.ஓ.) மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு (கி.ஊ.- பி.டி.ஓ.), ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் 2 இடத்திலும், வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

 தற்போது மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 1,250 பதவிகளுக்கு 27ம் தேதி தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட 1,497 பதவிகளுக்கு 30ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, ஜன.2ம் தேதி, வட்டார அளவிலான, 13 ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடக்க உள்ளது.
ஜன.6ம் தேதி தேர்வான நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும், 11ம் தேதி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் நடக்கிறது. கிராம ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு அப்பகுதி செல்வந்தர்கள், மக்கள் மத்தியில் அறிமுகம் உள்ளவர்கள் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கம். இதில், பொது மக்களுடன் நெருக்கமாக உள்ள வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆளும்கட்சி சார்பில் கைச்செலவுக்கு பணம், பலமான கவனிப்பு செய்வதால், சமூக ஆர்வலர்கள் சுயேச்சையாக போட்டியிட ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. தற்போது வேட்பு மனு தாக்கல் மந்த கதியில் நடப்பதால் களையிழந்த தேர்தலாக உள்ளது.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்