×

குழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த மினி பஸ்

களியக்காவிளை. டிச. 12:  குழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் அதிக வேகத்தில் புகுந்த மினி பஸ் மோதி 10 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை படுகாயமடைந்தனர். குமரி மாவட்டம் குழித்துறையில் தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்து மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். குழித்துறை - வெட்டுவெந்நி ரோட்டில் பழைய பாலம் அமைந்துள்ள ரோடு வழியாக மாணவிகள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று பழைய பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினி பஸ் மாணவி களை ஏற்றி செல்வதற்காக வேகமாக குழித்துறை ஜங்ஷன் நோக்கி சென்றது. ஏற்கனவே மாணவிகளை ஏற்றி செல்வதில் வேன்களுக்கும் மினி பஸ்களுக்கும் இதைடையே போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவிகளை முதலில் ஏற்றி செல்வதற்காக மினி பஸ் டிரைவர் வேகமாக வந்துள்ளார். இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்ற மாணவிகள் மீது மோதியது. இதையடுத்து மினி பஸ் வரிசையாக ெசன்ற வாகனங்கள் மீதும் மோதி நின்றது.

இதை கவனித்த 100க்கு மேற்பட்ட மாணவிகள் அலறியடித்து ஓடினர். காயமடைந்த மாணவி கள் ஆங்காங்கே அழுது கொண்டிருந்தனர். விபத்தை பார்த்து விரைந்து வந்த அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை கவனித்த அப்பகுதியில் நின்ற தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு 3 மாணவிகளை தங்கள் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். படுகாயமடைந்த ஆசிரியை பிறேமா, மாணவிகள் மேக்கோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் மகள் வைஷ்ணவி(19), முழுக்கோடு பகுதியை சேர்ந்த அர்ச்சனா, பரக்குன்று பகுதியை சேர்ந்த வினுஜா, குறுமாத்தூரை சேர்ந்த ஜெயலட்சுமி, ஐங்காமத்தை சேர்ந்த நிஷா, கழுவன்திட்டையை சேர்ந்த சுஜித்ரா, அஜிதா அனுஜா, அஸ்வினி உட்பட 10 மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவிக்கு கால் எலும்பு முறிந்த நிலையில் அதிக ரத்தம் வெளியானது. அவரை பொதுமக்கள் குழித்துறை தனியார் ஆஸ்பத்திரிக்கு சுமந்து சென்று முதலுதவி அளித்து ஆம்புலன்சில் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவிகள் காயமடைந்த தகவல் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குழித்துறை ேதவிகுமாரி கல்லூரி பேராசிரியைகள் மற்றும் முதல்வர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து சென்று சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே மினி பஸ் ஓட்டி வந்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது டிரைவர் பளுகல் பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் விபின்ராஜ்(25) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். குழித்துறை ஜங்ஷனில் நேற்று மாலை நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...