×

குமரிக்கு சோலாப்பூர் மார்க்கெட்டில் இருந்து வரத்து அதிகரிப்பு பெரிய வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது

நாகர்கோவில், டிச.12:  குமரி மாவட்டத்துக்கு சோலாப்பூர் மார்க்கெட்டில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே விலை குறைய தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறினர். சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் ெபாதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் கிலோ 160, 180 வரை விற்பனையானது. இதற்கிடையே விலை உயர்வை பயன்படுத்தி வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. இதை கண்காணிக்க முக்கிய மார்க்கெட்டுகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களுக்கு முன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள அப்டா மார்க்கெட் மற்றும் கோட்டார் மார்க்கெட்டுகளில் சோதனை நடத்தினர். காய்கறி குடோன்களில் பல்லாரி, சின்ன வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தனர். மத்திய அரசின் உத்தரவின் படி மொத்த விற்பனையாளர்கள் 50 டன் வரையிலும், சில்லரை விற்பனையாளர்கள் 10 டன் வரையிலும் வெங்காயம் இருப்பு வைத்துக் ெகாள்ளலாம். அதை தாண்டி இருப்பு வைத்திருந்தால் உணவு பதுக்கல் தடுப்பு  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக உணவு பொருட்களில் வெங்காயத்தின் பயன்பாடு குறைந்துள்ளது. ஓட்டல்களில் ஆனியன் தோசை விலை 40 இருந்து 60 ஆனது. ஒரு சில ஓட்டல்களில் ஆனியன் தோசை இல்லை என்றனர். இதே போல் முட்டை பொறியலுக்கு அதிகளவில் பல்லாரி பயன்படுத்த வேண்டும் என்பதால், முட்டை ெபாறியலும் இல்ைல என்றனர். இதே போல் சிங்கிள் ஆம்லேட் விலை 15 ல் இருந்து 20 ஆனது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. குமரி மாவட்டத்திலும் எகிப்து வெங்காயம் வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு எகிப்து வெங்காயம் மக்களிடம் வரவேற்பை பெற வில்லை. இதற்கிடையே தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பல்லாரியின் விலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. 7000 வரை இருந்த 50 கிலோ மூடை, தற்போது 5500 வரை வந்துள்ளது. இதனால் கிலோ பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ 110, 120 ஆகி உள்ளது. கடந்த வாரம் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 140, 160 வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சின்ன வெங்காயத்தின் வரத்தும் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விலை படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று கிலோ 120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டது. மிக சிறியதாக இருந்த வெங்காயத்தின் விலை சில கடைகளில் 100 என விற்பனையானது. இது குறித்து கோட்டாரை சேர்ந்த மொத்த வியாபாரி காமராஜ் என்பவர் கூறுகையில், பெங்களூரில் இருந்து வரத்து குறைந்ததுடன், மகாராஷ்டிராவில் மழை காரணமாக பெரிய வெங்காய விதைப்பு தள்ளி போனது. இதனால் தான் இந்த விலை ஏற்றம் வந்துள்ளது.
தற்போது பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. எகிப்து வெங்காயம் 50 கிலோ மூடை 7 ஆயிரம் வரை வியாபாரிகள் எடுத்து வைத்தனர். ஆனால் தற்போது சோலாப்பூர் மார்க்கெட்டில் இருந்து பெரிய வெங்காயம் புதிதாக வர தொடங்கி இருப்பதால், 7000 வரை இருந்த எகிப்து பெரிய வெங்காய மூடை (50 கிலோ) 5 ஆயிரத்துக்கும் வியாபாரிகள் கொடுக்க தொடங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்குகள் சின்ன வெங்காயம் விலையும் படிப்படியாக குறையும் என்றார்.

Tags : Solapur ,Kumari ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...