×

2வது நாளாக மகாதீப தரிசனம் செய்தனர் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலையில் அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 2வது நாளாக நேற்று காட்சியளித்தது. வரும் 20ம் தேதி வரை மகாதீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற மகாதீப பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் முதல் நாளன்று ஏற்றுவது மகாதீபம். 2வது நாளன்று ஏற்றுவது சிவாலய தீபம். 3ம் நாளன்று ஏற்றுவது விஷ்ணு தீபமாகும். திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சிதருவது வழக்கம்.

அதன்படி, 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, கோயில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர். மேலும், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். மலைமீது மகாதீபம் ஏற்றுவதற்காக, நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபம் ஏற்றும் பருவதகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள், தினமும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுகின்றனர்.

மலைமீது காட்சிதரும் மகாதீபம், வரும் 20ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சிதரும். மகாதீபம் மலைமீது காட்சிதரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, வரும் 20ம் தேதி வரை அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : temple ,darshan ,devotees ,Mahadeepa ,Annamaliyar ,wave ,
× RELATED கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்...