×

இலக்கியம்பட்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

தர்மபுரி, டிச.11: தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரிக்கு நீர்வரும் வழித்தட கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், நீர்வரத்தின்றி உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி செந்தில்நகர் பஸ் ஸ்டாப் அருகே இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு வத்தல்மலை அடிவாரம் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வத்தல்மலையில் இருந்து வரும் மழைநீர் தடைப்பட்டது. நீர்வரும் கால்வாய் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் சீராக ஏரிக்கு வருவதில்லை. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேவரும் கழிவுநீர் மற்றும் மழையால் மட்டுமே இலக்கியம்பட்டி ஏரிக்கு தற்போது நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. இந்த ஏரியை தர்மபுரி மக்கள் மன்றத்தின் இளைஞர்கள் தூர்வாரி, அழகுபடுத்தினர். ஏரியின் கரையோரத்தை பலப்படுத்தினர். கோழிக்கழிவு மற்றும் கொட்டப்பட்ட குப்பைகள், புதர்கள் அகற்றப்பட்டது. ஏரியை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை அமைத்தனர். 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. அரைவட்ட அரங்கம், செயற்கை தீவுகள் ஏரியில் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது.

ஏரியில் மீன் வளர்க்கப்படுகிறது. ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனால் மீன்கள் செத்து மிதந்தது. கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் துர்நாற்றம் வீசுகிறது. இலக்கியம்பட்டி ஏரிக்கு வரும் வத்தல்மலை கால்வாய்  தூர்வாரப்படாமல், செடிகள் வளர்த்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே ராமன்நகர் முதல் இலக்கியம்பட்டி ஏரி வரை நீர்வழித்தட கால்வாய் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இலக்கியம்பட்டி ஏரி -ராமர்நகர் வரை இலக்கியம்பட்டி ஏரிக்கு நீர்வரும் கால்வாய் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த ஒரு சில பகுதியில் மட்டும் தூர்வாரப்பட்டது. தூர்வாரியும் ஒரு பயனும் இல்லை. கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், நீர்வரத்து இல்லாமல் உள்ளது என்றனர்.

Tags : Lake Ilikampatti ,
× RELATED கால்வாய்கள் அடைப்பால் மழைநீர்...