×

சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க கோரிக்கை

காங்கயம், டிச. 11:காங்கயத்தில் சாக்கடைக் கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காங்கயம் நகராட்சி, கோவை சாலையில் உள்ள அகஸ்திலிங்கம்பாளையம் பகுதியில் கழிவு நீர் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அகலமான கழிவு நீர் கால்வாயின் மீது சிமென்ட் பலகை அமைக்காததால், இங்கு குடியிருக்கும் மக்கள் துர்நாற்றத்தோடும், கொசு தொல்லைக்கும் ஆளாகி வருகின்றனர். மேலும், இந்த கால்வாயை கடந்து அவர்களது வீட்டு வாசலுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆங்காங்கே கிடக்கும் தகரம், மரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சாக்கடைக் கால்வாயின் மீது போட்டு, நடந்து வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் மீது சொந்தமாக சிமென்ட் பலகை அமைப்பதற்கு அப்பகுதி மக்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால், சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க காங்கயம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கழிவுநீர் கால்வாயில் கிடந்த பழங்கால...