×

உள்ளாட்சி தேர்தலில் 2524 பதவிக்கு 196 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்

ஈரோடு, டிச. 11: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2524 ஊரக உள்ளாட்சி நேரடி பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கலில் மந்த நிலை நீடித்து வருவதால் 2 நாட்களில் 196 பேர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர் மற்றும் 2097 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2524 உறுப்பினர்களுக்கான நேரடி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கி வரும் 16ம் தேதி வரை வேட்பு மனுதாக்கல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் 96 பேர் மட்டுமே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என இந்த மந்த நிலை நீடித்து வருவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முதல் நாளில் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 100 வேட்புமனுக்கள் உள்ளாட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இராண்டாம் நாளான நேற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 73 பேர் என மொத்தம் 96 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்நாளில் 100 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இரண்டாம் நாளில் 96 பேர் மட்டுமே தாக்கல் செய்ததையடுத்து இரண்டு நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 196 பேர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே, வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 16ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் 6 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கலில் விறுவிறுப்பான நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : election ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட்...