×

மனித உரிமை கேள்விக்குறியாகிறது நாட்டில் விலங்குகளுக்கு உள்ள பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை மக்கள் நீதிமன்ற நீதிபதி வேதனை

நாகர்கோவில், டிச.11 : விலங்குகளுக்கு உள்ள பாதுகாப்பு இளம்பெண்கள், பெண் குழந்தைகளுக்கு இல்லாமல் போனது வேதனை தருகிறது என்று குமரி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி கூறினார். தேசிய மனித உரிமை தினத்தையொட்டி, நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பத்மா தலைமை வகித்தார். குமரி மாவட்ட மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) நீதிபதி மகிழேந்தி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது :தெலங்கானாவில் சமீபத்தில் பெண் டாக்டர் ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்து ெகால்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கைதான 4 பேரை, காவல் துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். இந்த நடைமுறை மிகவும் தவறானது. நீதிமன்றம் தான் தண்டனை வழங்க வேண்டும். காவல்துறை எப்படி தண்டனை வழங்க முடியும். அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றெல்லாம் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். மற்றொரு தரப்பினர் காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள். நாட்டில் நீதித்துறையின் நிலை என்ன? என்பதை எங்களை போன்ற நீதித்துறை, காவல்துறையில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.

டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனை வரை கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சுமார் 8 வருடங்கள் ஆகின்றன. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குற்றவாளிகளுக்கு ஏன்? தூக்கு நிறைவேற்றப்பட வில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், தூக்கிலிட ஆள் இல்லை. கயிறு இல்லை என்று பதில் வருகிறது. தெலங்கானா சம்பவம் நடந்த மறுநாள் உ.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட மற்றொரு  இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த இளம்பெண் கடந்தாண்டு பலாத்காரம் செய்யப்படுகிறார். தான் பாதிக்கப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கிறார். காவல்துறை இதில் தொடர்பு உடைய நபரை கைது செய்கிறது. கைதாகி ஜாமீன் வந்த நபர், கும்பலுடன் சேர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு வந்த அந்த பெண்ணை  தீ வைத்து எரிக்கிறார். சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் இறந்து போகிறார். இந்த நிலையில், தெலங்கானாவில் நடந்த என்கவுண்டரை  ஆதரிப்பதா? வேண்டாமா? என்பதை யோசித்து பாருங்கள். (அப்போது மாணவிகள் என்கவுண்டரை வரவேற்கிறோம் என கூறி கை தூக்கினர்.) திரைப்படங்களில் தொடக்கத்திலேயே இந்த படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட வில்லை என போடப்படுகிறது. இந்த நாட்டில் விலங்குகளை பாதுகாக்க  விலங்குகள் நல அமைப்புகள் வலுவாக உள்ளன.

ஆனால் இளம்பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வேதனை தருகிறது. மாணவிகள், இளம்பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். அச்சம், மடம், நாணம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எதையும் தைரியமாக எதிர் ெகாள்ளுங்கள். நாணமும், அச்சமும் நாய்க்கு தான் தேவை என பாரதி கூறி உள்ளார். தற்போது காவல்துறை சார்பில் காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் நாளிதழ்களை கண்டிப்பாக படியுங்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மாணவிகள், இளம்பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் ஏ.எஸ்.பி. ஜவகர், வக்கீல்கள் மரிய ஸ்டீபன், மரிய ஜேம்ஸ், சகிலா பர்வீன், குடும்ப நல ஆலோசகர் லெட்சுமி தேவி ஆகியோர் பேசினர்.

போக்சோ நீதிமன்றங்களில் நீதிபதி நியமிக்கவில்லை நீதிபதி மகிழேந்தி பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் மாவட்டமாக குமரி மாவட்டம் உள்ளது. இதுவரை 214 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 500 வழக்குகள் காவல்துறை விசாரணை நிலையில் உள்ளது. இது தவிர காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றத்துக்கும் வராமல் மறைக்கப்பட்ட சம்பவங்களையும் சேர்த்தால் 5 ஆயிரத்தை தாண்டும். தமிழகத்தில் 13 இடங்களில் இதுவரை போக்சோ நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நீதிமன்றங்களுக்கு இதுவரை தனி நீதிபதிகள் இல்லை. யாரை ஏமாற்ற போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அரசும், அமைப்புகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...